விவசாய பயிர்களின் விளைச்சலில் பொட்டாஷ் பாக்டீரியாவின் தரம்
உயிரினங்களின் இயக்கங்கள் சீரான முறையில் இயங்க சத்துக்களின் சுழற்சி இன்றியமையாதது. இச்சுழற்சியை நிலைப்படுத்தி இயக்க நுண்ணுயிர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இயற்கையில் மக்குதல் என்பதே சிதைவுறல் என்பதாகும். இதனால் தழை, மணி, கரிம, சாம்பல், சலிக்கா, கந்தகம், துத்தநாகம், இரும்பு போன்ற சத்துக்களின் சுழற்சி சீராக நடைபெறுகின்றது.
சத்துக்களை செடிகளுக்கு பொருத்திக் கொடுப்பதில் பாக்டீரியாவின் பங்கு மிகவும் இன்றியமையாதது.
செடிகள் குறிப்பிட்ட, பொருத்தமான பாக்டீரியாவை இணைக்கும் உயிர் வேதியல் கூறுகள்,
செடியின் வேர்களில் பாக்டீரியா ஏற்படுத்தும் மாற்றங்கள்,
செடிகளிலிருந்து சுரக்கப்படும் வேர் சத்துக்கள்,
வளர்ச்சி ஊக்கிகள்,
அங்கக அமிலங்கள்,
பசை போன்ற மாவுச் சத்துக்கள்
ஆகியவை ஒன்று சேர்ந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வேர் மண்டலங்களுக்கு ஈர்க்கின்றன. இவை இயற்கையாக காலங்காலமாய் மண்ணில் நடந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு பாக்டீரியா, வேர் பாகங்களில் இனப்பெருக்கம் செய்து, அதனை பெருக்கிக் கொள்கின்றது. இவை கூட்டாக காற்றில் இருக்கும் தழைச்சத்து மற்றும் மண்ணில் இருக்கும் இதர சத்துக்களான மணி, சாம்பல், சிலிக்கா, இரும்பு போன்றவற்றை ஈர்த்து செடிகளுக்கு கொடுக்கின்றன. பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளைப் பயிர்களுக்கு அளிக்கின்றது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகின்றது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலைபாகங்களில் சென்று சேர்வதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களிலும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றன.
தானியப்பயிர்களின் தண்டுப் பகுதிகள் உறுதியடைந்து இருக்கவும் உதவுகின்றது. தழைச்சத்து இடுவதினால் செழித்து வளரும் செடிகள், அதிக பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. சாம்பல், சிலிக்கா சத்து இடுவதினால் செடிகளின் கட்டமைப்பு சற்று கடினமடைவதுடன், எளிதில் நோய்க்கிருமி, பூச்சித்தாக்குதலிருந்து செடிகள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் செடிகளில் மாவுச்சத்து உற்பத்தி, அமினோ அமிலங்கள், புரத தயாரிப்பிலும் செயலாற்றுகின்றது. எனவே முழுமையான பயன் அடைய வேண்டுமென்றால் இச்சத்துகள் அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட அளவில், தகுந்த தருணத்தில் இடுதல் அவசியமாகும்.
பொட்டாசியத்தைக் கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் சிலிக்கா எனப்படுகின்றன. அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்துக் காணப்படும் சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயனிகளின் கூட்டுக்கலவைகளிலிருந்து சிலிக்காவைக் கரைத்து பொட்டாசியத்தைக் களிமண்ணிலிருந்து விடுவிக்கின்றது.
அவ்வாறு விடுவிக்கப்படும் பொட்டாசியம் நீரில் கரைந்து செடிகளினால் எளிதில் உட்கொள்ளும் நிலையில் மாற்றப்படுகின்றது. பரிமாற்ற நிலையிலுள்ள பொட்டாசியம், இவ்வகை பாக்டீரியாக்களினால் அதிக அளவில் குறுகிய காலத்தில் கிடைக்க வழி செய்கின்றது. பரிமாற்றம் இல்லாத நிலையில், கூறுகளாக விளங்கும் பொட்டாசியம் சில ஆண்டுகளில், இவ்வகை பாக்டீரியாக்களின் ஆக்ரமிப்பால் பரிமாற்ற நிலைக்கு மாற்றப்படுகின்றது. இச்செயல்கள் பாக்டீரியாவிலிருந்து வெளியாகும் அங்கக அமிலங்கள், பாலிசாக்கரைட் போன்றவையினாலும் நேர்மின் அயனி, எதிர் மின் அயனியின் பரிமாற்றங்களாலும் நிகழ்கிறது. பலவகை ஆராய்ச்சிகளில் பேசில்லஸ் மியுசிலாஜினோசஸ், பேசில்லஸ் எடாபிக்கல், பேசில்லஸ் சர்க்குலன்ஸ், பேசில்லஸ் குளோபிபார்மிஸ், பேசில்லஸ் பிளக்சிஸ், பேசில்லஸ் சபடிஸ்ரிஸ், அக்ரோபாக்டீரியம், ரேடியோபாக்டர், பிரட்சூரியா அவ்ரான்டியா போன்ற பாக்டீரிய ராசிகளும், அஸ்பர்ஜில்லஸ் நைஜர் என்னும் பூஞ்சாணமும், டோருள்ளோஸ்போரா குலோபோசர் ஆகியவை சிறந்த பொட்டாசியம் கரைத்து, பிரித்தெடுக்கும் ராசிகள் என கண்டறியப்பட்டது. பிரட்சூரியா என்னும் ராசி இந்தியாவில் பல இடங்களில் அங்ககப் பண்ணையத்தில் பயன்பாட்டில் உள்ளது. பொட்டாஷ் உரத்தின் அதிக விலையை மனதில் கொண்டு இயற்கையாக நம் மண்ணில் உள்ள சாம்பல் சத்தினையே கிடைக்கப் பெறச் செய்ய இவ்வகை பாக்டீரியாக்களை உபயோகப்படுத்தலாம்.